மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாற்றுத்திறனாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கோவை
ஜோதிடத்தை நம்பி பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 40 வயது மதிக்கத்தக்க கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் வந்தார். அப்போது அவர், கலெக்டர் அலுவலகம் முன்பு தான் பாட்டிலில் வைத்து இருந்த சாணிப்பவுடரை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று சாணிப்பவுடரை பாட்டிலை தட்டி விட்டனர். பின்னர் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
மனைவி பிரிந்து சென்றார்
விசாரணையில், அவர் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 40) என்பதும், சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜன் மற்றும் தேன்மொழி ஆகியோர் சேர்ந்து வாழ்ந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று ஜோதிடர் ஒருவர் கூறியதாக தெரிகிறது. இதனால் தேன்மொழியை அவருடைய உறவினர்கள் ராஜனிடம் இருந்து பிரித்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சேர்த்து வைக்கவில்லை
இதனால் அவதிப்பட்டு வந்த அவர் உறவினர்களிடம் பலமுறை சென்று மனைவியை சேர்த்து வைக்கும்படி கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இதனால் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தபோது சாணிப்பவுரை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story