கோவாவில் சுற்றுலா சென்றபோது வாடகைக்கு கார் எடுத்து மோசடி
கோவாவில் சுற்றுலா சென்றபோது வாடகைக்கு கார் எடுத்து மோசடி செய்த சம்பவத்தில் கோவையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவாவில் சுற்றுலா சென்றபோது வாடகைக்கு கார் எடுத்து மோசடி செய்த சம்பவத்தில் கோவையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாடகைக்கு கார்
கோவாவுக்கு சுற்றுலா சென்ற 4 பேர், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்தனர். ஆனால் குறிப்பிட்ட நாள் முடிந்த பின்னரும் அவர்கள் அந்த காரை திரும்ப ஒப்படைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன உரிமையாளர்கள் ஜி.பி.எஸ். மூலம் காரை கண்காணித்தனர். அப்போது அந்த கார் கேரளாவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து கோவா போலீசில் புகார் செய்தனர். அவர்கள் கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவையில் மடக்கி பிடித்தனர்
உடனே கோவை போலீசார் அந்த கார் எண்ணை வைத்து கண்காணித்தபோது குனியமுத்தூர் பகுதியில் இருந்து கார் தப்பிச்சென்றது. இதையடுத்து நகர் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அத்துடன் அந்த காரில் ஜி.பி.எஸ். கருவி உள்ளதால், அதன் மூலம் கார் என்ஜினை ஆப் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த கார் பீளமேடு பகுதியில் வந்தபோது கார் நடுரோட்டில் நின்றது.
இதையடுத்து காரில் இருந்த 4 பேரில் 3 பேர் இறங்கி ஓடிவிட்டனர். ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
கார் மீட்பு
அதில் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நவ்பல் (வயது 30) என்பது தெரியவந்தது. அத்துடன் தப்பி ஓடிய 3 பேரும் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் காரும் மீட்கப்பட்டது.
நவ்பல் மற்றும் கூட்டாளிகள் இதுபோன்று மேலும் பல இடங்களில் காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story