பா.ஜனதா பிரமுகர் படுகொலை
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:&
பா.ஜனதா பிரமுகர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் என்ற கதிர் (வயது 40). இவர் தேவகோட்டை ஒன்றிய பா.ஜனதா கட்சி பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் காவணவயல் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெரியசாமி (37) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருச்சி&ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காவணவயல் விலக்கு அருகே ரோட்டோரத்தில் உள்ள பஜ்ஜி கடை முன்பு நேற்று மாலை 5 மணியளவில் கதிர் உட்கார்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த பெரியசாமி, அவரது ஊரை சேர்ந்த முருகேசன் மகன் வீரபாண்டி(28) ஆகிய 2 பேரும் திடீரென்று கதிரை சரமாரியாக கொடுவாளால் வெட்டினர். இதில் அவரது வலது கையில் பலத்த வெட்டு விழுந்தது.
வெட்டிக்கொலை
பின்னர் பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்து தவறி விழுந்த கதிரை அவர்கள் 2 பேரும் தொடர்ந்து சரமாரியாக வெட்டினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கதிரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கொலை செய்யப்பட்ட கதிருக்கு சுதா என்ற மனைவியும் தருண் (7) என்ற மகனும் உள்ளனர்.
இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். முன்விரோதம் காரணமாகத்தான் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story