மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா


மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Sept 2021 2:53 AM IST (Updated: 22 Sept 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மருத்துவ கல்லூரி மாணவிக்கு கொரோனா

மதுரை
கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, தமிழக மருத்துவ கல்லூரிகளில் கடந்த மாதம் 16ந்தேதியில் இருந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துவரும் மாணவி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இதனை தொடர்ந்து அந்த மாணவிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த மாணவிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருச்சியை சேர்ந்த அந்த மாணவி, மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து விடுதியில் அவருடன் தங்கி படித்த மருத்துவ மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மகாலட்சுமி கூறுகையில், “மதுரை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தடுப்பூசியும் செலுத்தி இருக்கிறார். அவருக்கு லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதால், வீட்டு தனிமைப்படுத்துதல் போதுமானது என டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி உரிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த மற்ற மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. அவர் தங்கியிருந்த விடுதி வளாகம், அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Next Story