300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை; கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர்


300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை; கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 22 Sept 2021 3:39 AM IST (Updated: 22 Sept 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

கடத்தூர்
கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். 
கல்லூரி மாணவர்
ஈரோடு மாவட்டம் கோபி மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் மோகன். பெயிண்டர். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுடைய மகன் தருண்ராஜா (வயது 23). இவர் தூக்கநாய்க்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தருண்ராஜா தனது பள்ளி பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் ஓவிய போட்டிகளில் தேசிய தலைவர்களின் படங்கள், இயற்கை ஓவியங்கள் வரைந்து அதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சிகளும் அளித்துள்ளார்.
விருதுகள்
இதுவரை 700-க்கும் மேற்பட்ட தேசிய தலைவர்கள், இயற்கை காட்சிகள், கோவில் சிலைகள், கடவுள் உருவங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவற்றை பென்சில் ஓவியம், புள்ளி ஓவியம், கோடு ஓவியம், நவீன ஓவியம், ஆயில் பெயின்டிங், தஞ்சாவூர் ஓவியம், டிஜிட்டல் ஓவியங்களில் என வெவ்வேறு விதங்களில் வரைந்துள்ளார்.
2013-ம் ஆண்டு விஸ்வ மலர் சார்பில் வழங்கப்பட்ட இளம் ஓவியர் விருது, 2015-ம் ஆண்டு பன்முக திறன் விருது, 2016&ம் ஆண்டு இளம் ஓவியர் விருது, 2018-ம் ஆண்டு பெஸ்ட் பெயின்டர் விருது, 2019-ம் ஆண்டு பணிதாய் மொழி மற்றும், ஓவிய மணிமுரசு, கலைச்செம்மல் விருது, 2020-ம் ஆண்டு தன்னம்பிக்கை மலர் சார்பில் வழங்கப்பட்ட இளம் ரவிவர்மா விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சாதனை
இந்தநிலையில் தருன்ராஜா 300 நொடிகளில் கொலோசியம், பிரமிட், மீசோ அமெரிக்கன் பிரமிட், பீசா டவர், ஈபிள் டவர், புஜி கலீஃபா, தாஜ் மஹால், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், எம்பயர் ஸ்டேட், லண்டன் பாலம், சீனப்பெருஞ்சுவர், பெட்ரா-ஜோர்டான், ஸ்டோன்ஹெஞ்ச், ஓபரா உள்ளிட்ட உலகின் 18 அதிசயங்களின் உருவ படங்களை வரைந்து அதனை வீடியோவாக பதிவு செய்து கடந்த செப்டம்பர் 5-ந் தேதி பாக்கர் எவர் ஸ்டார் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
300 நொடிகளில் அவர் வரைந்த அந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பாக்கர் எவர் ஸ்டார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான விருது மற்றும் சான்றிதழ்கள் அவருடைய வீட்டிற்கே சம்பந்தப்பட்ட உலக சாதனை நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
 


Next Story