டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்வதற்கு இது முக்கிய பாதையாகும். அதனால் எப்போதும் சிறிய வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வந்தபடி இருக்கும்.
சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்றுவிடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு என்பது திம்பம் மலைப்பாதையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.
டீசல் தீர்ந்தது
இந்தநிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டு இருந்தது. நேற்று காலை 11 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 9&வது கொண்டை ஊசி வளைவை லாரி கடந்தது. அப்போது டீசல் தீர்ந்துபோனதால் லாரி நின்றுவிட்டது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. பின்னர் டீசல் கொண்டுவரப்பட்டு லாரியில் நிரப்பி அதன்பின்னர் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 மணி நேரம்
இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பகல் 2 மணியளவில் திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது பழுதாகி அப்படியே லாரி ரோட்டில் நின்றுவிட்டது. இதனால் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இருபக்கமும் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு மாலை 5 மணி அளவில் லாரி சாலை ஓரத்துக்கு இழுத்து வரப்பட்டது. அதன்பின்னரே அதாவது 3 மணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு நிலமை சீரானது. மொத்தத்தில் நேற்று திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
.
Related Tags :
Next Story