அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு


அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 10:10 PM GMT (Updated: 21 Sep 2021 10:10 PM GMT)

அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு
அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
கல் சிற்பங்கள்
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கொங்கு மண்டல பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தில் உள்ள பாண்டீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள கோவில் நிர்வாகி தங்கமுத்து என்பவர் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்பேரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி, சக்தி பிரகாஷ் ஆகியோர் அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இங்குள்ள கொற்றவை கோவிலின் பின்புறம் ஒரு பகுதி புதர் மண்டிக்கிடந்தது. அங்கு ஆய்வாளர்கள் சோதனை செய்தபோது 2 கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
1000 ஆண்டுகள் பழமை
அந்த சிற்பங்களை பார்வையிட்ட ஆய்வாளர்கள் ஆச்சரியம் அடையும் வகையில் அது சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருந்தது.
அதைத்தொடர்ந்து அந்த சிற்பங்களை ஆய்வாளர்கள் முறையான சோதனை நடத்தினார்கள். அப்போது பிரமிப்பூட்டும் பல செய்திகள் கிடைத்து உள்ளன. இதுபற்றி ஆய்வாளரும், பொறியாளருமான சு.ரவிக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கொற்றவை கோவில் 10-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். எனவே இந்த சிற்பங்களும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதை கண்டறிந்தோம். மேலும், இந்த சிற்பங்களை தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் ர.பூங்குன்றனார் ஆய்வு செய்து முடிவுகள் தெரிவித்து உள்ளார். இந்த சிற்பங்கள் வெண் சாமரம் வீசும் பெண்களின் உருவமாகும். கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் காலத்தால் முற்பட்டவையாக இவை உள்ளன. சிற்பத்தில் செதுக்கப்பட்ட பெண் உருவங்கள் துடி இடையோடு ஒரு காலை ஊன்றி மறுகாலை சிறிது மடக்கி உள்வளைவோடு உள்ளதால் இந்த சிற்பங்கள் கி.பி.5 அல்லது கி.பி.6-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம்.
வெண்சாமரம்
கோவிலில் வலது பக்கம் ஒரு சிற்பமும், இடது பக்கம் ஒரு சிற்பமும் உள்ளது. வலது பக்க சிற்பம் 150 செ.மீட்டர் உயரம், 45 செ.மீட்டர் அகலம் கொண்டது. அவர் வீசும் வெண்சாமரம் வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கை தொடையின் மீது ஊருஹஸ்த முத்திரையில் உள்ளது. இடைக்கச்சை அணிந்து உள்ளார். பசும்பை எனப்படும் மங்கல பொருட்கள் வைக்கும் சுருக்குப்பை வைத்து இருக்கிறார். காதில் குழைவகை காதணி, கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகலன்கள் உள்ளன. முழங்கைக்கு மேல் கடகவளை, கை மணிக்கட்டில் சூடகம் உள்ளன. தலையில் மகுடம் அணிந்து காணப்படுகிறார். இது சிற்பங்களில் தனிச்சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.
இடதுபக்கத்தில் உள்ள சிற்பம் 120 செ.மீட்டர் உயரம், 60 செ.மீட்டர் அகலம் கொண்டது. சிற்பத்தில் உள்ள பெண் வலது கால், இடது கால்களை மடக்கி சதுர நடன அமைப்பில் உள்ளார். வெண்சாமரம் இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கை அர்த்த சந்திர முத்திரையில் உள்ளது. காதில் பத்திர குண்டலம், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்கள் அணிந்து உள்ளார். 
சிற்பங்கள் 2-ம் சாத்விக உருவ அமைப்பில் நின்ற கோலத்தில் உள்ளன.
இந்த சிற்பங்கள் கண்டுபிடிப்பு கொங்கு மண்டல அளவில் சிற்பக்கலை பழமைக்கு முன்னோடியாக உள்ளது.
இவ்வாறு ஆய்வாளர் ரவிக்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.



Next Story