வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழையின்போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்படும் பகுதியில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து தங்க வைப்பதற்கான முகாம்கள் தயாராக இருக்க வேண்டும். முகாமில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள், சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் கை எந்திரங்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சியினை அளிக்க வேண்டும். மருத்துவ துறையினர் பாம்பு கடி உள்பட அனைத்து மருந்துகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜ சோழன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பானுகோபன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story