ஈமு கோழி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை


ஈமு கோழி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை
x
ஈமு கோழி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை
தினத்தந்தி 22 Sept 2021 10:36 PM IST (Updated: 22 Sept 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

ஈமு கோழி நிறுவன அதிபருக்கு 10 ஆண்டு சிறை


கோவை 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குரு என்ற குருசாமி (வயது 40).இவர் கடந்த 2010 &ம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் பிரவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார்.இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை குருசாமி அறிமுகப்படுத்தினார்.

 அதன்படி முதல் திட்டத்தில் பணம் முதலீடு செய்கின்றவர்களுக்கு 6 ஈமு கோழி குஞ்சுகள் வழங்குவது, தீவனம், ஷெட் அமைத்து கொடுப்பது, மருந்து மற்றும் பராமரிப்பு பணமாக மாதம் ரூ.6ஆயிரம் வருடம் போனசாக ரூ.20ஆயிரம் மற்றும் இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என்றும் இரண்டாவது திட்டமான வி.ஐ.பி திட்டத்தில்  முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் போனசாகவும், வருடத்திற்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இரண்டு வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பி கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் ரூ.2 கோடியே 39 லட்சத்தை முதலீடு செய்தனர்.

ஆனால் குருசாமி தான் கூறிய படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட நாமக்கல் அருகே உள்ள சேர்த்தமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்தார்.புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து குரு என்கிற குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ரவி, மோசடி செய்த குரு என்ற குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2 கோடியே 40 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் கதிர்வேல், சுந்தரமூர்த்தி, மகாராஜா. விஜயகுமார், செந்தில்குமார், சுரேஷ், அமுதன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட குருசாமி கோர்ட்டில் ஆஜராகாததால் நீதிபதி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். குருசாமி மீது இதுபோன்ற மேலும் பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Next Story