தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
நிழற்குடை வேண்டும்
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் மழை, வெயில் காலங்களில் பஸ் ஏற திறந்த வெளியில் கால்கடுக்க நின்று கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே பயணிகளின் சிரமத்தை போக்க கோவில்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
செந்தில்குமார், கோவில்பாளையம்.
பழுதான சாலை
கூடலூர் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் சிமெண்டு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன போக்குவரத்திற்கு பயனில்லாமல் உள்ளது.
இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சிமெண்டு சாலையை புதுப்பிக்க வேண்டும்.
சிவா, கூடலூர்.
சுகாதார சீர்கேடு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் உள்ளன. இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகள் கமர்சியல் சாலையில் இருந்து மணிக்கூண்டு செல்லும் நடைபாதையில் கொட்டப்படுகிறது.
இதனால் கடும் தூர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே, இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
தீபா, ஊட்டி.
ஆம்புலன்ஸ் செல்ல சிரமம்
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ்கள் அவசர நேரத்துக்கு செல்ல முடியவில்லை.
இதனால் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கட், ஹில்பங்க், ஊட்டி.
முறையாக அகற்றுவது இல்லை
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே குப்பை தொட்டி உள்ளது. இங்கு போடப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. அத்துடன் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
ஆஸ்பத்திரி அருகே சுகாதாரமற்ற நிலை இருப்பதால் இங்கு வருபவர்களுக்கு நோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
லோகேஷ், தாமரைகுளம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஆபத்தான மின்கம்பத்தை மாத்தியாச்சு...
கோவை சுங்கம் சிந்தாமணி பின்புறம் ஸ்ரீநகர் முதல் தெருவில் மின்கம்பம் பழுதான நிலையில் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் கடந்த 19-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான அந்த மின்கம்பத்தை மாற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
பெருமாள், ஸ்ரீநகர் முதல் தெரு.
குண்டும்-குழியுமான சாலை
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் ஆத்துமேடு பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலத்தின் மீது உள்ள சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
சக்திவேல், சிங்காநல்லூர்.
தெருநாய்கள் தொல்லை
கோவை ரத்தினபுரி தயிர்இட்டேரி புதுபாலம் அருகே தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது.
குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் இந்த வழியாக செல்லும்போது பயத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, ரத்தினபுரி.
சாக்கடை கால்வாய் அடைப்பு
கோவை கணபதி 4-வது கிராசில் உள்ள ஸ்ரீதேவி நகரில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதுடன், அதிகளவில் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
கண்ணப்பன், கணபதி.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
கவுண்டம்பாளையத்தில் மேம்பால பணிகள் நடந்து வருவதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அங்குள்ள மயானம் முதல் சிவாநகர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு உள்ளன.
ஆனால் அந்த சாலை குண்டும்&குழியுமாக இருப்பதால் விபத்து நடந்து வருகிறது. எனவே அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
கவிகாந்த், கோவை.
உபயோகம் இல்லாத கழிவறை
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரில் ஒரு கழிவறை உள்ளது. பழுதடைந்ததால் இந்த கழிவறை யாருக்கும் எவ்வித உபயோகமும் இல்லாத நிலையில் இருக்கிறது. அதை யாரும் பயன்படுத்துவது இல்லை.
கால்நடைகள் தங்கவும், குப்பைகள் கொட்டவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதை இடத்து அகற்ற வேண்டும்.
அருள் பாக்கியராஜ், திருவள்ளுவர் நகர்.
சீரமைக்காத சாலையால் அவதி
கோவைப்புதூர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் செப்பனிடப்படாததால், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சரிசெய்ய வேண்டும்.
எட்வர்டு, கோவைப்புதூர்.
Related Tags :
Next Story