தலை துண்டித்து தொழிலாளி படுகொலை
திண்டுக்கல் அருகே, தலை துண்டித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
தொழிலாளி கொலை
திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதிக்கு நேற்று இரவு 8.30 மணி அளவில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவரின் கையில் ரத்தம் சொட்ட, சொட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் தலை இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்களும் பீதியில் கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களும் தலையை அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே வீசிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துண்டிக்கப்பட்ட தலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடல் எங்கு கிடக்கிறது? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அப்போது அனுமந்தராயன்கோட்டையை அடுத்துள்ள வட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் அனுமந்தராயன்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டீபன் (வயது 28) என்பது தெரியவந்தது.
வலைவீச்சு
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கொடைக்கானலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தொழிலாளியாக வேலை பார்த்த அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதிகள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கூலி வேலை செய்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வட்டப்பாறை பகுதியில் ஸ்டீபன் உடல் கிடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அனுமந்தராயன்கோட்டை பஸ் நிறுத்தம் வரை ஓடி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்டீபனுக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பரபரப்பு
எனவே முன்விரோதத்தில் இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்டீபனுக்கு எசபெல்லா மார்க்கரேட் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திண்டுக்கல் அருகே நேற்று காலையில் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலா தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரவு 8.30 மணிக்கு தொழிலாளி ஸ்டீபனும் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story