ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேல்நிலை தொட்டி
ஈரோடு அருகே அத்தப்பம்பாளையம் பகுதியில் சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு குடிநீர் வசதிக்காக கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த தொட்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்புவது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் சிதிலமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றப்படாமல் உள்ளது.
அதில் கான்கிரீட் சுவர்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், பல இடங்களில் கீறல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலை உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பயன்படாமல் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அகற்ற கோரிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 1990-ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பழுதடைந்ததால், தண்ணீர் கசிந்தது. அவ்வப்போது தண்ணீர் தொட்டி பழுது நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக சரி செய்ய முடியவில்லை. இதனால் அத்தப்பம்பாளையம் கருப்பணன்கோவில் பகுதியில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதுதவிர எங்கள் பகுதியில் மேலும் 2 தண்ணீர் தொட்டிகளும் கட்டப்பட்டு உள்ளன.
இந்த தண்ணீர் தொட்டிகள் மூலமாக தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே அத்தப்பம்பாளையத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story