அறச்சலூர் அருகே தெருநாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது
அறச்சலூர் அருகே தெருநாயை துப்பாக்கியால் சுட்டவரை போலீசாா் கைது செய்தனா்.
அறச்சலூர்
அறச்சலூர் அருகே உள்ள லிங்க கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42). கார் மெக்கானிக். அந்த பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. சம்பவத்தன்று இவருடைய தோட்டத்துக்குள் தெருநாய் ஒன்று நுழைந்துள்ளது. உடனே தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் அவர் நாயை சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த நாய் அலறி துடித்தது. அந்த பகுதி மக்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து பார்த்தார்கள். பின்னர் நாயை ஏன் சுட்டீர்கள்? என்று கேட்டதற்கு அவர்களை மூர்த்தி மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பூந்துறை சேமூர் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வனிடம் இதுபற்றி கூறினர். அவர் மூர்த்தியிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி தமிழ்செல்வனையும் தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளார். இதுபற்றி உடனே தமிழ்செல்வன் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார்கள்.
மேலும் துப்பாக்கியால் சுடப்பட்ட தெருநாய் மீட்கப்பட்டு, ஈரோட்டில் உள்ள கால் நடை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story