பெருந்திரள் முறையீடு: உள்ளாட்சித்துறை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சித்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நடந்த பெருந்திரள் முறையீட்டையொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சித்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நடந்த பெருந்திரள் முறையீட்டையொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
பெருந்திரள் முறையீடு
ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளனத்தின் முடிவின்படி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தூய்மைப்பணி, பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, அலுவலக பணிகள் என்று சுமார் 10 ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் 75 சதவீதம் பேர் தினக்கூலி பணியாளர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவிக்குழு, ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் பணி செய்து வருகிறார்கள்.
பணி நிரந்தரம்
இவ்வாறு தினக்கூலியாக வேலை செய்துவரும் பணியாளர்களுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சுயஉதவிக்குழு, ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளில் பணியாற்றி வரும் அனைவரையும் நேரடி பணியாளர்களாக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்-பெண் பணியாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். இந்த போராட்டத்துக்கு திருப்பூர் தொகுதி எம்.பி.யும், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. தலைவருமான கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். அவர் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கோரிக்கை மனு
மேலும், கோரிக்கை மனுவை ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனிடம் வழங்கினார். இதுபோல் தமிழக முதல்-அமைச்சருக்கும் ஒரு கோரிக்கை மனு மாவட்ட கலெக்டர் வழியாக வழங்கப்பட்டது.
பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நா.பெரியசாமி, பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் எஸ்.டி.பிரபாகரன், துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.சின்னசாமி வரவேற்றார். முடிவில் செயலாளர் ஆர்.மணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story