ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டம்


ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2021 11:17 PM IST (Updated: 23 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தத்தில் பொது வார்டாக மாற்றக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம், 

ராமநத்தம் ஊராட்சிக்குட்பட்ட பெரங்கியத்தில் 9-வார்டு பொது வார்டாக இருந்தது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது தனி(பெண்) வார்டாக மாற்றியமைக்கப்பட்டது. இதை கண்டித்து பெரங்கியம் 9-வது வார்டு வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்தனர். இதனால் போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இது புகார் அளித்த பின்பும் 9-வது வார்டை பொது வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அடுத்த மாதம்(அக்டோபர்) பெரங்கியம் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் 9-வது வார்டை பொது வார்டாக மாற்றக்கோரி 2-வது முறையாக தேர்தலை புறக்கணிக்க போவதாக வாக்காளர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், பெரங்கியம் 9-வது வார்டு தனி வார்டாக மாற்றப்பட்டதற்கு ஊராட்சி செயலாளர்  பிரேம்குமார் தான் காரணம் என்று கூறியதோடு, அவரை கண்டித்தும், 9-வது வார்டை பொது வார்டாக மாற்றக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2-வது முறையாக தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story