அரசு பஸ்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது


அரசு பஸ்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2021 8:55 PM GMT (Updated: 23 Sep 2021 8:55 PM GMT)

மதுரையில் அரசு பஸ்களில் இருந்து பேட்டரிகள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை
மதுரையில் அரசு பஸ்களில் இருந்து பேட்டரிகள் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கிய அவர்களிடமிருந்து 8 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
பஸ்களில் பேட்டரிகள் திருட்டு 
மதுரை நகர் மற்றும் மாவட்டப் பகுதியில் நிறுத்தப்படும் பஸ்களில் இருந்து கடந்த சில நாட்களாக பேட்டரிகள் திருடும் சம்பவம் அதிகரித்து வந்தது. மேலும் மாட்டுத்தாவணி பகுதியில் கோ.புதூர், புதுக்குளம் அரசு பஸ் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களில் இருந்து ஒரே நாளில் 4 பேட்டரிகள் கடந்த 19&ந் தேதி திருடப்பட்டது. இதுகுறித்து புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பஸ்களில் பேட்டரிகளை திருடும் கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா உத்தரவிட்டார். 
அதன்படி குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பஸ் பணிமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அங்கு கண்காணிப்பு கேமரா இல்லை. ஆனால் அதன் அருகே உள்ள இடத்தில் இருந்த கேமராவை ஆய்வு செய்த போது நள்ளிரவு 2 மணி அளவில் ஒருவர் பணிமனையின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே செல்வதும், அவர் பஸ்சில் இருந்து பேட்டரியை கழற்றி மொபட்டில் வைத்து திருடி செல்வதும் பதிவாகி இருந்தது. அதே நபர் தான் திருநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரியை திருடி சென்றதும் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்தது. 
2 பேர் சிக்கினர் 
அதை தொடர்ந்து போலீசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சி, சாக்கிளிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த வடிவேல்(வயது 39) என்பவர் தான் பேட்டரியை திருடியதும், அவருக்கு மதுரை வேடர்புளியங்குளம் போஸ் என்பவர் உடந்தையாக இருந்தும் தெரியவந்தது. 
போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் செக்கானூரணி பஸ் பணிமனையில் 8 பேட்டரிகளும், டி.கல்லுப்பட்டியில் 4 பேட்டரிகள், திருநகரில் 4 பேட்டரிகள், புதூரில் 4 பேட்டரிகள் என மொத்தம் 20 பேட்டரிகள் திருடியுள்ளனர். இதில் 8 பேட்டரிகளை போலீசார் மீட்டனர். மீதம் உள்ள பேட்டரிகள் உடைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. 
ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை 
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரிகளை அவர்கள் திருடி 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். மேலும் சுமார் 80 கிலோ எடையுள்ள அந்த பேட்டரியை ஒருவரே கழற்றி வண்டியில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். எனவே திருடப்பட்ட பகுதியான புதூரில் இருந்து திருமங்கலம் வரை உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் மீது ஏற்கனவே பேட்டரி திருட்டு வழக்கு உள்ளது. எனவே பொதுமக்கள் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்பதன் மூலம் முற்றிலுமாக தடுக்க முடியும் என்றார். 

Next Story