கல்லால் தாக்கி மனைவி, மகள் கொலை


கல்லால் தாக்கி மனைவி, மகள் கொலை
x
தினத்தந்தி 24 Sept 2021 2:25 AM IST (Updated: 24 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகி அருகே மனைவி மற்றும் மகளை கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு: கலபுரகி அருகே மனைவி மற்றும் மகளை கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்லால் தாக்கி கொலை

கலபுரகி மாவட்டம் சேடம் டவுன் ஈஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் திகம்பர் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெகதீஷ்வரி (44). இந்த தம்பதிக்கு பிரியங்கா (11) என்ற மகள் இருந்தாள். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் திகம்பருக்கும், ஜெகதீஷ்வரிக்கும் இடையே சண்டை உண்டானது.

பின்னர் தனது மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு ஜெகதீஷ்வரி படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில், நள்ளிரவில் எழுந்த திகம்பர் வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து வந்து மனைவி ஜெகதீஷ்வரி, மகள் பிரியங்காவின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்களின் தலைகளில் அவர் கல்லை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தலை நசுங்கி தாய், மகள் பரிதாபமாக இறந்து விட்டனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

உடனே அங்கிருந்து திகம்பர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி சேடம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜெகதீஷ்வரி, பிரியங்காவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதே நேரத்தில் மனைவி ஜெகதீஷ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு திகம்பர் அடிக்கடி சண்டை போட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த காரணத்திற்காக மனைவி மற்றும் மகளை திகம்பர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து சேடம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த திகம்பரையும் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சேடத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story