5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி


5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 24 Sept 2021 2:25 AM IST (Updated: 24 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சியில் 5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது

மதுரை
மதுரை மாநகராட்சியில் 5 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கோவிஷில்டு
நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 70 ஆயிரத்து 686 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதில் முதல் டோஸை 12 லட்சத்து 24 ஆயிரத்து 165 பேரும், 2&வது டோஸை 3 லட்சத்து 46 ஆயிரத்து 521 பேரும் செலுத்தி உள்ளனர். ஆண்கள் 7 லட்சத்து 44 ஆயிரத்து 318 பேரும், பெண்கள் 8 லட்சத்து 26 ஆயிரத்து 134 பேரும், திருநங்கைகள் 234 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதன்படி ஆண்களை விட பெண்களே அதிகம் தடுப்பூசி செலுத்தி இருப்பது தெரியவருகிறது.
அதேபோல் வயது வாரியாக கணக்கீட்டால் 60 வயதிற்கு மேல் 2 லட்சத்து 86 ஆயிரத்து 813 பேரும், 45 வயதில் இருந்து 60 வயதிற்குள் 4 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேரும், 18 வயதில் இருந்து 44 வயதிற்குள் 8 லட்சத்து 25 ஆயிரத்து 468 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர். கோவிஷில்டு தடுப்பூசியை 13 லட்சத்து 81 ஆயிரத்து 14 பேரும், கோவாக்சின் தடுப்பூசியை 1 லட்சத்து 84 ஆயிரத்து 933 பேரும், ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை 4 ஆயிரத்து 739 பேரும் போட்டு உள்ளனர்.
தொட்டப்பநாயக்கனூர்
அதிக தடுப்பூசி செலுத்திய மையத்தில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பூசி மையம் தான் முதலிடம் பிடித்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முனிச்சாலை, கோ.புதூர், திடீர் நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களும், அப்பல்லோ ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களான அன்சாரி நகர், சமயநல்லூர், கள்ளந்திரி, செக்கானூரணி, வலையங்குளம், அலங்காநல்லூர், கருங்காலங்குடி, எழுமலை, டி.கல்லுப்பட்டி. வெள்ளலூர், அன்னத்தோப்பு, தொட்டப்பநாயக்கனூர், கள்ளிக்குடி, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே சில கிராமங்களில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது மதுரை மாநகராட்சியிலும் 5 வார்டுகளிலும் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்காக மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த நடவடிக்கைக்கு நல்ல பலனாக 5 வார்டுகளில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. 10&வது வார்டு ஆரப்பாளையம், 12&வது வார்டு கிருஷ்ணாபாளையம், 46&வது வார்டு புதூர் லூர்துநகர், 68&வது வார்டு திரவுபதி அம்மன் கோவில் பகுதிகள், 82&வது வார்டு சொக்கநாதர் கோவில் ஆகிய வார்டுகளில் 100 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் தங்களுக்கு தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லை என்று கூறியவர்கள் கணக்கீட்டில் இடம் பெற மாட்டார்கள். அவர்களை தவிர்த்து மற்ற அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 9, 13, 45, 67, 81 ஆகிய வார்டுகளில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி மாநகராட்சி நடை போட்டு கொண்டு இருக்கிறது.

Next Story