ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடர்ந்து இரவில் வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 8.15 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சாரல் மழையாக இரவு 9.30 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. அதன் பின்னரும் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதன் காரணமாக முனிசிபல் காலனி பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து ரோட்டில் ஓடியது. மேலும் பல்வேறு பணிகளுக்காக ஈரோடு மாநகர் பகுதிகளில் தோண்டப்பட்ட ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த ரோடுகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் இரவில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த மழை காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கோபி
இதேபோல் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணி அளவில் இடி, மின்னலுடன் திடீரென பலத்தமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 6.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொளப்பலூர், சிறுவலூர், காசிபாளையம், கரட்டூர், நஞ்சகவுண்டன்பாளையம் பாரியூர், மொடச்சூர், வேட்டைக்காரன் கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சென்னிமலை
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. கீழ்பவானி வாய்க்காலில் தற்போது தண்ணீர் செல்லும் சமயத்தில் இந்த மழை பெய்ததால் நெல் நாற்றங்கால் நடவு செய்வதற்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story