ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2021 2:46 AM IST (Updated: 24 Sept 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 71 பேருக்கு ரூ.58 லட்சத்து 19 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 992 பேருக்கு அரசின் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 634 பேருக்கு, ரூ.56 கோடியே 67 லட்சத்து 4 ஆயிரம் காப்பீடு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து வருகிறார். மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 85 திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் பட்டியல் வழங்கப்பட்டு, திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்தால் ஈரோடு மாவட்டம் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும்.
விளையாட்டு அரங்கம்
ஈரோடு சோலார் பகுதியில் 25 ஏக்கரில் மாடல் பஸ் நிலையம் 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும். மேலும் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும். கனிராவுத்தர் குளம் எதிரில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அறச்சலூரில் 4 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்கப்படும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடியில் விளையாட்டு அரங்கம் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையங்களுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள் இருந்தது. புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் 1,200 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 100 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் 250 மாணவர்கள் வரை சேர்க்கப்படும். இதேபோல் முதுகலை மருத்துவப்படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வங்கிக்கடன்
காவிரி ஆற்றில் சாயத்துணிகளை அலசும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நிரந்தரமாக தடுக்கப்படும். குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றது. இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் அரசு ரூ.11 லட்சம் செலவிடுகின்றது. இதில் பயனாளிகள் பங்களிப்பு என்பது ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை கொடுக்கவேண்டும். பயனாளிகளின் பங்கு தொகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால், பயனாளிகளுக்கு வங்கிகளில் கடன் பெற்று மாதந்தோறும் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. சித்தோடு அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையத்தில், மாற்றுத்திறனாளிகள் 85 பேருக்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடம் வசதியாக இல்லை என்று கோரிக்கை விடுத்துள்ளதால் தற்போது, அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Next Story