ஆசனூர் அருகே பரபரப்பு குட்டியுடன் லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானை
ஆசனூர் அருகே குட்டியுடன் லாரியை வழிமறித்த யானை கரும்புகளை ருசித்து தின்றது.
தாளவாடி
ஆசனூர் அருகே குட்டியுடன் லாரியை வழிமறித்த யானை கரும்புகளை ருசித்து தின்றது.
கரும்புகளை எதிர்பார்த்து...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போது வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
உணவு மற்றும் தண்ணீரை தேடி தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
லாரியை வழிமறித்த யானை
அதேபோல் நேற்று காலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தது. ஆசனூர் அருகே காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது அந்த பகுதியில் ரோட்டோரம் குட்டியுடன் யானை சுற்றித்திரிந்து கொண்டு இருந்தது. லாரியை பார்த்ததும் யானை ஓடி வந்து அதன் முன்பு நின்றது. இதனால் அச்சம் அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.
இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்களும் செல்ல முடியவில்லை. ஆங்காங்கே டிரைவர்கள் தாங்கள் வந்த வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து கிளீனர் லாரியில் இருந்து இறங்கி பின்பக்கம் ஏறினார். பின்னர் அதிலிருந்த கரும்பு துண்டுகளை எடுத்து ரோட்டோரம் வீசினார். இதையடுத்து யானை கரும்பு துண்டுகளை துதிக்கையால் எடுத்து ருசித்து தின்றது. குட்டி யானையும் கீழே விழுந்து கிடந்த கரும்பு துண்டுகளை எடுத்து ருசித்தது. அதைத்தொடர்ந்து லாரி அங்கிருந்து புறப்பட்டது. மற்ற வாகனங்களும் சென்றன. இதனால் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குட்டியுடன் வந்த யானை கரும்பு லாரியை வழிமறித்தது வாகன ஓட்டுனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story