திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டன் துணி
தாளவாடி அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை செல்கிறது. திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அதிக அளவுக்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்பதும், விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு காட்டன் துணி பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ஜெயக்குமார் என்பவர் ஓட்டினார். அவருடன் லாரியின் கிளீனர் மகேஷ் இருந்து உள்ளார்.
கவிழ்ந்தது
நேற்று அதிகாலை 4 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் காயம் அடைந்து லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அங்கிருந்து காலை 9 மணி அளவில் அப்புறப்படுத்தி மீட்டனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story