வசனங்கள், பாடல்களை கேட்டு சிவாஜியின் தீவிர ரசிகனாக மாறிய 5-ம் வகுப்பு மாணவன்
வசனங்கள், பாடல்களை கேட்டு சிவாஜியின் தீவிர ரசிகனாக 5-ம் வகுப்பு மாணவன் மாறியுள்ளான்.
ஈரோடு
தமிழ் திரையுலகில் நடிப்பு பல்கலைக்கழகமாக விளங்கியவர் சிவாஜி கணேசன். திரையுலகத்தினரால் மட்டுமின்றி, அனைத்து தரப்பினராலும் நடிகர் திலகம் என்று போற்றப்பட்டவர். அவரது ரசிகர்கள் மறைந்து அடுத்த தலைமுறை நடிகர்களுக்கான ரசிகர்களும் மறைந்து வரும் நிலையில், இளைய தலைமுறையை கவரும் நடிகராக சிவாஜி மாறி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் கோபி எஸ்.பி.நகர் செல்வபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். மின்சார வாரிய உதவி இயக்குனர். இவருடைய மனைவி வனிதா. தனியார் வங்கி மேலாளர். இவர்களுக்கு பிரணவ், காண்டீவ் என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் காண்டீவ் கோபியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். காண்டீவ் தற்போது சிவாஜியின் தீவிர ரசிகராக உள்ளார். அவருடைய வசனங்கள், பாடல்களை கேட்டால் பரவசப்பட்டு மகிழ்ச்சி அடைகிறார். சிவாஜி நடித்த 287 திரைப்படங்களின் பெயர்கள், அவரை வைத்து இயக்கிய டைரக்டர்கள், அவர் நடித்த படங்களின் வரிசை, அவரது குடும்ப வாழ்வு என்று பல விஷயங்களை தெரிந்து வைத்து அசத்துகிறான்.
இதுபற்றி காண்டீவ் கூறும்போது, 'என்னுடைய தாத்தா எஸ்.தணிகாசலம் செல்போனில் பழைய பாடல்களை வைத்து கேட்பது வழக்கம். அப்போது இது சிவாஜி பாட்டு, டி.எம்.சவுந்தரராஜன் பாடியது. சுசீலா பாடியது என்று கூறுவார். அந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், பழைய படங்கள் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் எல்லா நடிகர்களை விட சிவாஜியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவரது நடை, ஸ்டைல், நடிப்பு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. எனவே அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்தேன். இப்போது அவரது பல படங்களின் வசனத்தையும் மனப்பாடமாக தெரிந்து வைத்து இருக்கிறேன்' என்றார்.
Related Tags :
Next Story