மக்களை தேடி மருத்துவ திட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்


மக்களை தேடி மருத்துவ திட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sept 2021 2:32 AM IST (Updated: 25 Sept 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு
மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்துவம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்ட தொடக்க நிகழ்ச்சி ஈரோடு தென்றல் நகர் பகுதியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.  முன்னிலை வகித்தார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனா சூழலில், நோயாளிகளாக இருப்பவர்கள் பயன் பெறும் வகையிலும், அவர்கள் சிரமப்படாமல் இருக்கவும் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதற்கான வாகனம் ஏற்படுத்தி, 2, 3 பேராக வீடு வீடாக சென்று மருந்து தேவைப்படுவோரை கண்டறிந்து மருந்து வழங்குகின்றனர்.
வீடுகளிலேயே மருந்தை பெறலாம்
குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை நோயாளிகள் நேரில் மருத்துவமனை சென்று, சிகிச்சையை தொடர்வதுடன், வீடுகளிலேயே மருந்தை பெறலாம். பரிசோதனை தேவை இல்லை என்றால், அவர்களுக்கு தொடர்ந்து மருந்து வழங்கப்படும். மருத்துவமனையில் கூட்டம் கூடுதல், நோயாளிகள் வெளியே சென்று வருவதை தவிர்த்தல், உதவிக்கு ஆட்கள் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.
ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும், இதுபோன்ற தொடர் மருத்துவ சிகிச்சை பெறுவோர், 5 ஆயிரத்து 577 பேர் உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கான மருந்துகள் தேடிச்சென்று வழங்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் விடுபட்டவர்கள் மாநகராட்சியில் தெரிவித்தால், அந்த பட்டியல்படி வீடு தேடி மருந்து வரும். இந்த பணிக்காக, 100 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அரசு மருத்துவமனை
இந்த பணி 6 மாத காலம் தொடரும்போது, மருந்து தேவைப்படுவோர் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் வந்துவிடுவதுடன், வீட்டில் இருந்தபடி பயன் பெறுவார்கள். மிகவும் முடியாதவர்களாக இருந்தால், அவர்கள் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைக்கு வசதி செய்து தரப்படும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட தாளவாடி, நம்பியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலுகாக்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
தாளவாடியில் உள்ள நோயாளிகள் சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா மாநிலம் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தற்போது அங்கு 5 டாக்டர்கள் பணி செய்கின்றனர். அவர்களில் 2 பேர் சிறப்பு நிபுணர்களாக நியமிக்கப்பட்டால், அனைத்து வகையான சிகிச்சையும் அங்கேயே கிடைக்கும். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், 19-வது வார்டு பொறுப்பாளர் சுப்பு என்கிற பாலசுப்பிரமணியம், மாநகர பிரதிநிதி ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story