சென்னிமலை அருகே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 27-ந் தேதி மறியல் போராட்டம் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 27-ந் தேதி சென்னிமலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னிமலை
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 27-ந் தேதி சென்னிமலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
சென்னிமலை அருகே பசுவபட்டியில் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொன்.பெரியசாமி தலைமை தாங்கினார். தற்சார்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணி, வக்கீல் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சாலை மறியல் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிற முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதுடன், இதையொட்டி சென்னிமலை ஒன்றியத்தில் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து சென்னிமலை-காங்கேயம் ரோடு பசுவபட்டி பிரிவு சாலையில் திரளான விவசாயிகளுடன் மறியல் போராட்டம் நடத்துவது.
வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என்பதுடன், அனைத்து பிரிவு மக்களின் உணவுப்பொருட்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் என்பதாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிற 100 யூனிட் வீட்டு பயன்பாட்டு கட்டணமில்லா மின்சாரம் பறிபோகும் என்பதுடன் விசைத்தறி நெசவாளர்களுக்கு கிடைக்கிற 750 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் பறிபோகும் என்பதாலும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த சட்டங்களை நிறைவேற்றினால் மாநில அரசின் உரிமை பறிபோகும் என்பதால் மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் 27-ந் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களையும் சந்தித்து ஆதரவு கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story