ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடி கைது


ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடி கைது
x

ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
வேட்டை
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலை மறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி கைது செய்ய ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நடவடிக்கை எடுத்தார்.
13 ரவுடிகள் கைது
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு, தங்கள் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 30 பழங்குற்றவாளிகள் நன்னடத்தை சான்று அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சந்தேக நபர்கள் 37 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் ஒரே நாள் இரவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,658 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுபோன்ற தீவிர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும்என்றார்.


Related Tags :
Next Story