உத்திரமேரூர் பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் நகை, பணம் கொள்ளை
உத்திரமேரூர் பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம் கவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவரது மனைவி திவ்யா (28). நேற்று காலை 11 மணி அளவில் திவ்யா வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் திவ்யாவை பிடித்து கட்டிப்போட்டு அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் தாலி சரடு 4 பவுன் மற்றும் காதில் இருந்த 3 கிராம் கம்மலையும் கழற்றி கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
பின்பு திவ்யாவின் உறவினர்கள் அங்கு வந்து கட்டி போட்டு இருந்த அவரை விடுவித்தனர். இது பற்றி திவ்யா சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதே போல், உத்திரமேரூர் பேரூராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (41). இவரது மனைவி செல்வமணி (38). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இருவரும், கடந்த புதன்கிழமை திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.
வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்து 5 பவுன் நகையும், ரூ.30 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
மேலும், உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (49). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (45). இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 4½ பவுன் நகையும், ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுபற்றி கிருஷ்ணகுமார் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story