ஆட்டோவை மோதவிட்டு அரிவாளால் விவசாயி வெட்டிக்கொலை
பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஆட்டோவை மோதவிட்டு விவசாயியை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெங்களூரு: பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஆட்டோவை மோதவிட்டு விவசாயியை நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோவை மோத விட்டு...
பெங்களூரு ராமமூர்த்திநகர் அருகே போவி காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விவசாயி ஆவார். வெங்கடேசுக்கு பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி அருகே விவசாய தோட்டம் உள்ளது. அங்கு அவர் மாடுகளையும் வளர்த்து வந்தார். நேற்று காலையில் அவர் தன்னுடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆவலஹள்ளி அருகே மாரகொண்டனஹள்ளி மெயின் ரோட்டில் வெங்கடேஷ் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ, வெங்கடேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் சாலையில் விழுந்தார். இந்த நிலையில் ஆட்டோவிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேசை சரமாரியாக வெட்டினார்கள். மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க தனது கையால் அரிவாளை வெங்கடேஷ் பிடிக்க முயன்றதாக தெரிகிறது.
கை துண்டானது
அப்போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் வெங்கடேசின் ஒரு கை துண்டானது. பலத்த வெட்டுக்காயம் அடைந்த வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து மர்ம நபர்கள் ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர். நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவலஹள்ளி போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் பெங்களூரூ புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
பரபரப்பு
அப்போது ஆவலஹள்ளி அருகே இருக்கும் வெங்கடேசுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலம் காரணமாக சிலருடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலப்பிரச்சனை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த காட்சிகள் மூலம் மர்மநபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆவலஹள்ளியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story