பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.
ஈரோடு
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பெரும்பாலும், துளசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் தரிசனம் தருவார். வீடுகளிலும் பொதுமக்கள் விரதம் இருந்து வழிபாடுபார்கள்.
நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பெரிய கோவில்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சிறிய கோவில்களில் சமூக இடைவெளிவிட்டு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பழமையான கோட்டை அழகராஜா பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. துளசி மாலையால் சாமி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள பேட்டை பெருமாள் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கொடுமுடி-கோபி
பருவாச்சி மலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், கெட்டி சமுத்திரம் கரை பெருமாள், தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் மற்றும் அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கொடுமுடியில் புகழ்பெற்ற மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள வீரநாராயண பெருமாள் சன்னதியில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. துளசி மாலை அலங்காரத்தில் சாமி அருள் பாலித்தார்.
கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் ஸ்ரீதேவி பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள், பாரியூர் ஆதி நாராயண பெருமாள், மொடச்சூர் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் வெளியே நின்று வணங்கிவிட்டு சென்றார்கள்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரில் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னிதியில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றது. வடக்கு புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலில் பால ஆஞ்சநேயர் சன்னிதியில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கொளாநல்லியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது.
கொந்தளம் வரதராஜ பெருமாள், பனப்பாளையம் ஸ்ரீராமர், கொளத்துப்பாளையம் ஸ்ரீசீதாராமர் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை, பெருந்துறை, பவானியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story