வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது


வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 26 Sept 2021 3:05 AM IST (Updated: 26 Sept 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.

ஈரோடு
வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
வடகிழக்கு பருவமழை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதை தொடர்ந்து, வெள்ளம் செல்ல கூடிய பகுதிகளில் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம் நீர் நிலைகளில் தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். நீர் தேக்கி வைப்பதற்கான தடுப்பணைகள் பழுது ஏற்பட்டு இருப்பின் அதன் பழுதுகளை சரிசெய்ய வேண்டும்.
அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளின் கரைகளில் நீர் வளத்துறை செயற்பொறியாளர்கள் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டு கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அணைகள் மற்றும் ஏரிகளின் கதவுகள், மதகுகள் ஆகியன சரிவர இயங்குவதை சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் உறுதி செய்வதோடு அவைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மணல் மூட்டைகள்
நீர் வளத்துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள் குழுக்கள் அமைத்து அனைத்து நீர் நிலைகளையும் கண்காணிக்க வேண்டும். கனமழையின் போது 24 மணி நேரமும் முறையாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து, நீர் இருப்பை கண்காணித்து நீர் வளத்துறை செயற்பொறியாளர்கள் உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
கால்வாய் தூர்வாரும் முகாம் கடந்த 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் இணைப்பு, வடிகால் ஆய்வு மற்றும் வெள்ள நீர் உபரி பாதுகாப்பு, மதகுகளையும், குறுக்கணைகளையும் சரி செய்ய வேண்டும். மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்களை பாதுகாப்பான பகுதிகளில் சேகரித்து வைக்க வேண்டும்.
விழிப்புணர்வு
மழைக்காலங்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் சேகரித்து வைக்கப்பட வேண்டும். அவசர காலத்தில் தேவையான மருந்துகளின் விவர பட்டியல் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவசர காலத்தில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவ பணியாளர்களை குழுவாக அமைத்து பணிகளை மேம்படுத்த வேண்டும். வெள்ள நீர் தேங்கும் இடங்களில் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், குடிநீரில் சரியான அளவில் குளோரின் சேர்த்து வழங்க வேண்டும்.
பாதுகாப்பு முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தேவைக்காக தற்காலிகமான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். கிராமப்புற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பழுதான மரங்களை அகற்றிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் போக்குவரத்து பாதையை மாற்றி சரியான தடத்தினை பயன்படுத்த வேண்டும்.
ஒத்திகை நிகழ்ச்சி
குடிநீரை கொண்டு செல்வதற்கான வாகனங்கள், எரிவாயு, ஜெனரேட்டர், பம்பு செட்டு, படகுகள், தேவையான டார்ச் லைட்டுகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு துறையின் சார்பில் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் தேங்கும் மழைநீரை அருகில் உள்ள நீர்நிலைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண் 1077, 04242260211-ல்  தெரிவிக்க வேண்டும். 
தொலைபேசி எண்
மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்கள் தணிக்கை செய்து மழைமானி நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தாசில்தார்கள் மழை அளவு மற்றும் இதர சேதங்கள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குள் 1077 தொலைபேசி எண்ணிற்கு தவறாமல் தெரிவிக்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் வட்டார வாரியாக நிறுவப்பட்ட தானியங்கி மழைமானிகளை தணிக்கை செய்து அதன் செயல்பாடுகள் குறித்து அறிக்கையினை சமர்ப்பிக்க அனைத்து தாசில்தார்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் பருவ மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று தேவைப்படும் நேரங்களில் முக்கியமான இடங்களில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் தங்களது பகுதியில் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக தாசில்தார்களின் தொடர்பு எண்களை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் பட்டியல்
சாதாரண காலங்களில் மரம் நட்டு வளர்க்கவும் மற்றும் பேரிடர் காலங்களில் சூறாவளிக்காற்றினால் விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் அந்தந்த பகுதியை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மற்றும் இளைஞர் குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த உரிய பயிற்சி பெற்ற நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மின்வாரியத்துறை, பொதுப்பணித்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி துறைகளில் உள்ள களப்பணியாளர்களையும், வட்ட அளவிலான தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்து வைத்துக்கொண்டு, பேரிடர் காலங்களில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும். 
அனைத்துத்துறை அலுவலர்களும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் கவனம் செலுத்தி, செயல்படாத ஆழ்துளை கிணறுகள், வறண்ட ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றை நிலத்தடி நீர் சேமிப்பு ஆழ்துளை கிணறுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில், அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரத்திக் தயாள், பயிற்சி கலெக்டர் சிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, ஆர்.டி.ஓ.க்கள் பிரேமலதா (ஈரோடு), பழனிதேவி (கோபி), சுகாதார துணை இயக்குனர் சோமசுந்தரம், மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
1 More update

Next Story