ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து சாவு
ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
ஈரோடு
ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி பெண் மயங்கி விழுந்து இறந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பானிபூரி சாப்பிட்டார்
ஈரோடு காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகள் ரோகிணி தேவி (வயது 34). எம்.சி.ஏ. பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சம்பவத்தன்று ரோகிணி தேவியின் சகோதரர்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் 2 பார்சல்களில் பானிபூரி வாங்கி வந்துள்ளனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துள்ளார். இதன் பின்னர் அவர் எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு இரவில் தூங்கினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வழக்கம்போல் எழுந்துள்ளார். அப்போது ரோகிணி தேவி மிகவும் சோர்வாக இருந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதற்கிடையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரோகிணி தேவியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் உடனடியாக அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
சாவு
இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ரோகிணி தேவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் ரோகிணியின் தாய் மணிமேகலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இறந்த பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் தான் ரோகிணி தேவி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் எந்த கடையில் பானிபூரி வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story