தாளவாடி அருகே 4 கோழிகளை கடித்து கொன்ற சிறுத்தைகள்
தாளவாடி அருகே 4 கோழிகளை சிறுத்தைகள் கடித்து கொன்றன. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே 4 கோழிகளை சிறுத்தைகள் கடித்து கொன்றன. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளார்கள்.
சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று கல்குவாரியில் பதுங்கி கொண்டு தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தனர் ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்கிறது. பல இடங்களில் கண்காணிப்பு கேமராவும் அமைத்துள்ளார்கள். கடந்த வாரம் தொட்டகாஜனூரில் ரமேஷ் என்பவர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
கோழிகளை கொன்றது
தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). விவசாயி. இவர் ஆடு, மாடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். அப்போது இரவு 11 மணிஅளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே மாணிக்கம் எழுந்து வந்து பார்த்தார்.
அப்போது 2 சிறுத்தைகள் மாணிக்கம் வளர்த்து வந்த கோழிகளை கடித்துக்கொண்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு ஒலி எழுப்பினார். உடனே 2 சிறுத்தைகளும் 4 கோழிகளை கவ்விக்கொண்டு கல்குவாரி இருக்கும் பகுதியை நோக்கி பாய்ந்து சென்றுவிட்டது. செல்லும் வழியில் சிறுத்தையின் வாயில் இருந்து ஒரு கோழி கீழே விழுந்துவிட்டது.
தோட்டத்தில் நடமாட்டம்
நேற்று காலை இதுகுறித்து மாணிக்கம் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தாளவாடி வனச்சரகர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்கள்.
சிறுத்தை போட்டுச்சென்ற கோழியையும், அங்கு பதிவாகியிருந்த கால்தடத்தையும் ஆய்வு செய்தார்கள்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணிஅளவில் தொட்டகாஜனூரில் மக்காச்சோள தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்துள்ளார்கள்.
குட்டி ஈன்றது
இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, 'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறியது. அதன்பின்னர் ஒரு பெண் சிறுத்தை வெளியேறி ஆண் சிறுத்தையுடன் ஒன்றாக கல் குவாரியிலேயே பதுங்கிக்கொண்டது. கடந்த வருடம் பெண் சிறுத்தை ஒரு குட்டி ஈன்றது. அதுவும் தற்போது பெரிதாகிவிட்டது. 3 சிறுத்தைகளும் சேர்ந்து கால்நடைகளை தினமும் வேட்டையாடுகின்றன. வனத்துறையினர் உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும்' என்றார்கள்.
Related Tags :
Next Story