தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை செல்வபுரம் 56-வது வார்டு அருள் கார்டன் பகுதியில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்குகிறது.
இதனால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, கட்டிட கழிவுகளை சாக்கடை கால்வாயில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
முகமது ஹனீபா, செல்வபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை தண்ணீர் பந்தலில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் வழியில் கியாஸ் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வருகின்றன.
இதில் தற்போது அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக அந்த வழியில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து முடித்து, சாலையை சரிசெய்ய வேண்டும்.
வஜ்ரவேலு, விளாங்குறிச்சி.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை உடையாம்பாளையம் லட்சுமி கார்டனில் மின் விளக்குகள் ஒளிருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
எனவே அந்த தெரு விளக்குகளை ஒளிரச் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
அகிலேஷ், உடையாம்பாளையம்.
தெருநாய்கள் தொல்லை
கோவை மாநகரில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. இவை இரவு நேரங்களில் பணி முடிந்து இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன.
இதனால் நாய்க்கடி பட்டு அல்லது வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் பொதுமக்கள் செல்கின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் தீர்வு காண வேண்டும்.
ராஜா, கோவை.
டிரான்ஸ்பார்மர் மாற்றப்படுமா?
கோவை ராமகிருஷ்ணா சிக்னலில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி பெயர்ந்து எப்போது கீழே விழலாம் என்று ஆபத்தான நிலையில் உள்ளது.
அந்த பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்.
தாபன்கோஸ், கோவை.
நச்சுப் புகையால் அவதி
கோவை பெரியசாமி லே-அவுட் ரத்தினபுரி 2&வது வீதியில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை அதிகளவில் வெளியே வருகிறது.
இதனால் அந்தப் பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே குடியிருப்பு பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு அந்த தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும்.
காளிதாசன், ரத்தினபுரி.
பழுதடைந்த சாலை
குனியமுத்தூர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புட்டுவிக்கி வழியாக உக்கடம் செல்லும் சாலை தற்போது கோவை வர மாற்று சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ரோடு மிகவும் பழுதடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள், கோவை.
பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்
மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி தொட்டதாசனூர் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரத்திலும் தொடர்ந்து ஒளிருகின்றன.
இந்த பிரச்சனையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சவுந்தர், தொட்டதாசனூர்.
பன்றிகள் தொல்லை
கோவையை அடுத்த பள்ளபாளையம் பஞ்சாயத்து, மீனாட்சி அம்மன் நகர் பகுதியில் பன்றிகள் அதிகளவில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுகின்றன.
இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
சுந்தரேசன், மீனாட்சி அம்மன் நகர்.
வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் ரெயில்வே கீழ்மட்ட பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலத்தின் கான்கிரீட் தளம் பெயர்ந்து கம்பிகள் நீண்டு கொண்டிருக்கின்றன.
சில நேரங்களில் வாகனங்களின் டயர்களை கம்பிகள் பதம் பார்த்து விடுகின்றன. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கான்கிரீட் தளத்தை சீரமைக்க வேண்டும்.
பாலா, ஜமீன்ஊத்துக்குளி.
மதுபிரியர்களால் தொல்லை
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்திற்கு செல்லும் சாலையோரத்தில் நின்று மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இங்கு மது அருந்த கூடாது என்று போலீசார் எச்சரிக்கை பேனர் வைத்தும் மதுபிரியர்கள் கண்டுகொள்வதில்லை.
எனவே சாலையோரத்தில் மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித், பொள்ளாச்சி.
வேகத்தடை வேண்டும்
தொண்டாமுத்தூர்-போளுவாம்பட்டி சாலையில் உள்ள 3 சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
3 புறங்களில் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சந்திப்பில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன்வர வேண்டும்.
எஸ்.குகன், தொண்டாமுத்தூர்.
Related Tags :
Next Story