5,715 பதவிகளுக்கு 19,982 பேர் போட்டி


5,715 பதவிகளுக்கு 19,982 பேர் போட்டி
x
தினத்தந்தி 26 Sep 2021 5:30 PM GMT (Updated: 26 Sep 2021 5:30 PM GMT)

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5,715 பதவியிடங்களுக்கு 19,982 பேர் போட்டியிடுகின்றனர். 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் ,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதல்கட்டமாக அக்டோபர் 6-ந் தேதியன்று செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக 9-ந் தேதி காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

3,692 வேட்பு மனுக்கள் வாபஸ்

இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15&ந் தேதியன்று தொடங்கி 22&ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 6,097 பதவியிடங்களுக்கு 24,194 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில் 24,053 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன, 141 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று முன்தினம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் சிலர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு சென்று தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். அதுபோல் ஒரே வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பட்சத்தில் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களையும், மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் வாபஸ் பெற்றனர். அந்த வகையில் மொத்தம் 3,692 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.

379 பேர் போட்டியின்றி தேர்வு

மேலும் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 22 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் 357 பேரும் ஆக மொத்தம் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வார்டுகளில் மட்டும் எந்தவொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அவை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

19,982 பேர் போட்டி

இதன் அடிப்படையில் 19,982 பேர் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர். இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 177 பேரும், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,369 பேரும், 666 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2,702 பேரும், 4, 728 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 15,734 பேரும் என 5,715 பதவியிடங்களுக்கு 19,982 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அந்தந்த வேட்பாளர்களுக்குரிய சின்னத்தையும் தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர்.

Next Story