அந்தியூர் அருகே பயங்கரம் வெல்டிங் எந்திரம் வெடித்து உடல் கருகி வாலிபர் பலி; 2 கால்களும் துண்டானது வெடிபொருள் வெடித்ததால் விபத்தா? ஆர்.டி.ஓ. விசாரணை
அந்தியூர் அருகே வெல்டிங் எந்திரம் வெடித்ததில் உடல் கருகி வாலிபர் பலியானார். இதில் அவருடைய 2 கால்களும் துண்டானது. வெடிபொருள் ஏதேனும் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? என ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே வெல்டிங் எந்திரம் வெடித்ததில் உடல் கருகி வாலிபர் பலியானார். இதில் அவருடைய 2 கால்களும் துண்டானது. வெடிபொருள் ஏதேனும் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? என ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெல்டிங் தொழிலாளி
அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் கொமராயனூரை சேர்ந்தவர் தீபக். இவருடைய வீட்டின் முன் பகுதியில் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகளை கொண்டு சட்டம் அமைக்கும் வேலை நடந்தது. இந்த வேலையை அந்தியூர் சங்கராபாளையத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் (வயது 35), அவருடைய சித்தப்பா முருகன் (60), உறவினர் விமல் ஆனந்த் (30) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வெல்டிங் எந்திரம் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கூரையின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வெற்றிவேல் தூக்கி வீசப்பட்டதுடன், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் அவருடைய 2 கால்களும் சம்பவ இடத்திலிருந்து 30 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த முருகன், விமல் ஆனந்த் மற்றும் வேலையை கண்காணித்து கொண்டிருந்த தீபக்கின் மனைவி பிரியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் அருகில் கட்டப்பட்டிருந்த ஒரு மாடும் பரிதாபமாக இறந்தது. இதில் தீபக்கின் வீட்டு சுவர் சேதம் அடைந்ததுடன் பெரிய ஓட்டையும் விழுந்தது.
காயமடைந்தவர்கள் மீட்பு
உடனே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டனர். இதில் முருகன், விமல் ஆனந்த் ஆகியோர் அந்தியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், பிரியா பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் வெள்ளித்திருப்பூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வெற்றிவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
அதுமட்டுமின்றி இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று வெல்டிங் எந்திரம் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததா? அல்லது தீபக்கின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் ஏதேனும் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வெடிமருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்து பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3 கிலோ மீட்டர் தூரம்
இறந்து போன வெற்றிவேலுக்கு காயத்ரி என்கிற பிரியா என்ற மனைவியும், செந்தில்வேல், அகில்வேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். இறந்த வெற்றிவேலின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது.
விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஏதோ ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த பகுதியே அதிர்வு ஏற்பட்டது போல் தோன்றியது. இந்த சத்தம் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது,என்றனர். விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காணப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story