சென்னிமலையில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னிமலை அருகே கல்லால் தாக்கி வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கல்லால் தாக்கி வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரத்த காயங்களுடன்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ரெயில்வே மேம்பால பகுதியில் நேற்று முன்தினம் இரவு 35 வயது வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலை
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்த வாலிபரை, அந்த பகுதிக்கு யாரோ மர்ம நபர்கள் அழைத்து வந்து கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம்,என தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
இதுபற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வீரா சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரெயில் தண்டவாளம் வரை சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தனிப்படை அமைப்பு
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), சண்முகம் (பெருந்துறை), சண்முகசுந்தரம் (அறச்சலூர்) ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும் ஈங்கூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story