ஈரோடு மாவட்டத்தில் 84,402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர்: 579 மையங்களில் தடுப்பூசி முகாம் ஆணையாளர் இளங்கோவன், ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டனர்


ஈரோடு மாவட்டத்தில் 84,402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர்: 579 மையங்களில் தடுப்பூசி முகாம் ஆணையாளர் இளங்கோவன், ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 27 Sept 2021 2:53 AM IST (Updated: 27 Sept 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 579 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 84 ஆயிரத்து 402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர். முகாம்களை ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 579 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களில் 84 ஆயிரத்து 402 பேர் ஊசி போட்டுக்கொண்டனர். முகாம்களை ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா பார்வையிட்டார்.
3-ம் கட்ட முகாம்கள்
தமிழ்நாடு முழுவதும் நேற்று 3-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன. ஏற்கனவே வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியாகி, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் அவர்களை முகாமுக்கு அழைத்து வந்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஒரு முகாமில் குறைந்த பட்சம் 200 டோக்கன்கள் வழங்கி ஊசி போடவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி சுமார் 1 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்கள், வாக்குச்சாவடி மையங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் காலை முதல் மாலைவரை நடந்தன. மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில்...
ஈரோடு மாநகராட்சி பகுதியில் மொத்தம் 65 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆணையாளர் எம்.இளங்கோவன் மேற்பார்வையில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். மாநகர் பகுதியில் 17 ஆயிரத்து 800 தடுப்பூசிகள் போட இலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. 
ஆனால் அதையும் தாண்டி 18 ஆயிரம் பேர் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பல்வேறு முகாம்களுக்கும் சென்று ஊசி போடும் பணிகளை பார்வையிட்டனர்.
ஆர்.டி.ஓ. பார்வையிட்டார்
ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர். பி.பி.அக்ரகாரம், தண்ணீர்பந்தல்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், கொங்கம்பாளையம், சித்தோடு, மேட்டுநாசுவம்பாளையம், நசியனூர், நஞ்சனாபுரம், சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட முகாம்களுக்கு ஆர்.டி.ஓ. பிரேமலதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர். நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் 579 முகாம்கள் மூலம் 84 ஆயிரத்து 402 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்
அந்தியூர் வட்டாரத்தில் அரசு பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் உள்பட 37 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 5 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டு முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காலை 7 மணி முதலே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 
அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி தலைமையில் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் கிராம செவிலியர்களை கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டனர்.
கோபி
கோபி தாலுகாவுக்கு உள்பட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, தாசில்தார் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இதேபோல் கோபி நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜெயராம் நடுநிலைப்பள்ளி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, செங்கோடப்பா ஆரம்ப பள்ளி உள்பட 11 இடங்களில் நடந்தது. இந்த முகாமை கோபி நகராட்சி ஆணையாளர் பிரேமானந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சோலைராஜ், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நகர தி.மு.க. செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story