போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஈரோடு காவிரி ரோடு பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக புகார்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் காவிரி ரோட்டில் பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஈரோடு
போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் காவிரி ரோட்டில் பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடை பணிகள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை தொட்டி அமைக்கவும், குழாய்கள் பதிக்கவும் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டி அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள்.
பல வாரங்கள் கடந்தே அடுத்த கட்ட பணிகள் நடக்கின்றன. இதுபோல் தொட்டிகள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்து குழாய்கள் போடும் பணி நடக்கிறது. 2 பணிகளும் முடிந்து விட்டாலும் குறிப்பிட்ட சாலை பல ஆண்டுகள் கடந்தே சரி செய்யப்படுகிறது. இதே நிலை மாநகரின் வாகன பெருக்கம் மிகுந்த சாலைகளிலும் தொடர்வது போக்குவரத்தில் அவலமான நிலையை ஏற்படுத்தி வருகிறது.
காவிரி ரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாகும். ஈரோட்டில் இருந்து நாமக்கல், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலூர், சென்னை என்று முக்கிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது.
அதன்பின்னர் சாலையை சீரமைக்கும் பணி செய்யப்படவில்லை. தற்போது சில பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் குறுகலான ரோட்டில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இது கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது.
மெத்தனம்
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
ஈரோட்டில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் காவிரி ரோடும் ஒன்று. இங்கு ஏற்கனவே ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால், தற்போது இருக்கிற ரோடும் குறுகலாக மாறி விட்டது. சாலையில் மண் குவிந்து புழுதி பறக்கிறது.
வீடுகள், கடைகளில் இருப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். முக்கியமான இந்த ரோட்டில் விரைவாக பணிகளை முடித்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துவிட்டோம். ஆனால், பணிகளை விரைந்து முடிக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை பணிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story