சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு


சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு
x
தினத்தந்தி 27 Sep 2021 12:01 PM GMT (Updated: 27 Sep 2021 12:01 PM GMT)

சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் திருமாவளவன் ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

தாம்பரம்,

சென்னை சிட்லபாக்கம் ஏரி நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றை அகற்றும்படியும் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் சில ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிட்லபாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தார். ஏரி ஆக்கிரமிப்பு இடங்களையும் பார்வையிட்ட திருமாவளவன், அங்கு வசிக்கும் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

இங்கு வசிப்பவர்கள், சாதாரண வேலை செய்யக்கூடிய ஏழை மக்கள். அவர்களை வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கி, குடியிருப்புகளை இடிக்க உள்ளதாக கூறியதால் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை இந்த இடத்திலேயே இருக்கும் வகையில் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும். கருணை உள்ளத்தோடு இவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும். இந்த பிரச்சினையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story