வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்


வாழைக்கன்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
x
தினத்தந்தி 27 Sept 2021 10:07 PM IST (Updated: 27 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் வாழைக்கன்றுகளை சேதப்படுத்தி காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் வாழைக்கன்றுகளை சேதப்படுத்தி காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

காட்டுப்பன்றிகள் நடமாட்டம்

கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, கோதவாடி, கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம், தாமரைக்குளம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள தோட்டங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் காட்டுப்பன்றிகள் வாழை, தக்காளி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

வாழைக்கன்றுகள் சேதம்

இதை தடுக்க விவசாயிகள் பலமுறை வருவாய்த்துறையினர், வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து கோடங்கிபாளையம் செல்லும் வழியில் விவசாயி கணேஷ்குமார் என்பவரது தோட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டுப்பன்றிகள் 50-க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழைக்கன்றுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் நஷ்டத்துக்கு ஆளான விவசாயி கணேஷ்குமார் கூறியதாவது:-

கவலை

கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி குளம் பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தற்போது குளம் சீரமைப்பு பணி நடைபெறுவதால் கோதவாடி குளம் பகுதியில் இரவு நேரங்களில் பதுங்கியிருந்த காட்டுப்பன்றிகள் தற்போது கிராம பகுதிக்கு புகுந்து வருகிறது. மேலும் கிராம பகுதிகளில் வாழை, மரவள்ளிக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன. இது எங்களுக்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை தடுக்க கிராம பகுதியில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story