பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம்
நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-1 மாணவி
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள சின்னநெகமம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மோகனாதேவி. இவர்களது மகள் ஜெயவர்சினி(வயது 16). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இதற்கிடையில் தினமும் ஜெயவர்சினி நீண்ட நேரம் செல்போன் உபயோகித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் அவர் கேட்காமல், தொடர்ந்து நீண்ட நேரம் செல்போன் உபயோகித்து வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் காளிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த ஜெயவர்சினி செல்போன் உபயோகித்து கொண்டு இருந்தார். இதை கண்ட தாயார் மோகனாதேவி அவரை கண்டித்தார். மேலும் அவரது கையில் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டு, வீட்டு வேலைகளை கவனிக்க சென்றார்.
இதனால் மனமுடைந்த ஜெயவர்சினி தனது தாயார் சென்ற அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டினார். தொடர்ந்து அவர் மற்றொரு அறைக்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கதறி அழுத தாய்
இதற்கிடையில் கதவை திறந்துவிடும்படி மோகனாதேவி கூச்சல் போட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து, அந்த கதவை திறந்தனர். பின்னர் மோகனாதேவி அவர்களுடன் சேர்ந்து, ஜெயவர்சினியை தேடினார். அப்போது அவர் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மோகனாதேவி கதறி அழுதார்.
இதுகுறித்து நெகமம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story