மின்சாரம் தாக்கி மாணவி சாவு


மின்சாரம் தாக்கி மாணவி சாவு
x
தினத்தந்தி 27 Sept 2021 10:40 PM IST (Updated: 27 Sept 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி ஆனார்.

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி பலி ஆனார். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவி
நம்பியூரை அடுத்த மேட்டுக்கடை எரிக்காட்டுபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி வடிவு. 
இவர்களுக்கு பானுமதி (வயது 13) என்ற மகளும், உதயகுமார் (12) என்ற மகனும் உள்ளனர். இதில் நஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பானுமதி 7-ம் வகுப்பு படித்து வந்தார். 
குளிக்க சென்றார்
நேற்று மாலை வீட்டில் உள்ள குளியல் அறைக்கு பானுமதி குளிக்க சென்றார். அப்போது அங்கிருந்த மின் ஒயர் மூலம் குளியல் அறையின் இரும்பு கதவில் மின் கசிவு ஏற்பட்டு இருந்ததை அவர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.  இதை அறியாமல் அவர் இரும்பு கதவை தொட்டு உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
குளிக்க சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய தாய் வடிவு தன்னுடைய மகன் உதயகுமாரை அழைத்து அக்காவை வெளியே வரச்சொல் என கூறி அனுப்பி உள்ளார். 
இறந்து கிடந்தார்
உடனே உதயகுமாரும் குளியல் அறைக்கு சென்று இரும்பு கதவை தட்டி உள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார். 
இதை கண்டதும் அவருடைய தந்தை முருகன் மற்றும் தாய் வடிவு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சுதாரித்து கொண்ட முருகன் உடனே தன் வீட்டில் உள்ள மின் இணைப்பை துண்டித்து விட்டு குளியல் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பானுமதி இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். 
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும், வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த மாணவி பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story