தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Sept 2021 11:24 PM IST (Updated: 27 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

பொள்ளாச்சியில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் சாலை அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில்தான் போலீஸ் நிலையமும் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்றுவதுடன், இதுபோன்று கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மலர்விழி, பொள்ளாச்சி.

போக்குவரத்து நெரிசல்

  சூலூர் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ள சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

  மணிகண்டன், கலங்கல்.

சுகாதார சீர்கேடு

  நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு அருகே ராஜாஜி நகருக்கு செல்லும் நடைபாதையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நடைபாதை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் மோசமாக உள்ளது.

  மேலும் மது குடித்துவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களை அங்கே வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே நடைபாதையில் பாட்டில்களை வீசுவதை தடுக்க வேண்டும்.

   ரசூல், குன்னூர்.

குப்பை கிடங்காக மாறிய சுடுகாடு

  சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் உள்ள சுடுகாட்டில் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடக்கை எடுத்து, அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

  மஜீத், சூளேஸ்வரன்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

  பொள்ளாச்சி வட்டம் சீலக்காம்பட்டியில் இருந்து நாகூர் செல்லும் வழியின் குறுக்கே உள்ள மின் கம்பங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளன. சாலையோரம் உள்ள இந்த மின் கம்பம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மீது விழுந்தால் பெரும் விபரீதம் ஏற்படக் கூடும். பெரிய விபத்து ஏற்படும் முன் இந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.

  சந்திரன், சீலக்காம்பட்டி.

சாக்கடை கால்வாயில் குப்பைகள்

  பொள்ளாச்சி-உடுமலை சாலை எஸ்.எஸ்.கோவில் வீதியில் உள்ள குப்பைத் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்கு கொட்டப் படும் குப்பைகள் அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் கலக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு புதிதாக குப்பை தொட்டி வைத்து சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

  நாராயணன், பொள்ளாச்சி.

தெருநாய்கள் தொல்லை

  கோவை காந்திபுரம் மற்றும் கணபதி பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. இரவு பணி முடிந்து வீடுகளுக்கு செல்பவர்கள் சில நேரம் அந்த நாய்களிடம் கடி வாங்க வேண்டி உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மகேந்திரன், கணபதி.

போக்குவரத்துக்கு இடையூறு

  கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் மரங்கள் கொண்டு சென்றதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த லாரிகளை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த லாரிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

  கோபால், கோத்தகிரி.

வேகத்தடை குறித்து அறிவிப்பு

  கோவை மாநகர பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க சாலைகளில் பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இது பாராட்டுக் குறியது. ஆனால் அங்கு வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதனால் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வேகத்தடைகள் இருப்பதை கண்டறிய அதன் மீது வெள்ளை நிறத்தில் வர்ணம் அடிக்க வேண்டும்.

  கணேசன், கணபதி.

சாலை நடுவே குழி

  கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே சாலையின் நடுவே குழி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். சில நேரத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலையின் நடுவே இருக்கும் குழியை சரிசெய்ய வேண்டும்.

  கந்தன், கோவை.

முட்புதர்கள் ஆக்கிரமிப்பு

  பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியாபுரம் பிரிவில் இருந்து மக்கம்பாளையம் செல்லும் சாலையின் இருபுறத்திலும் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் வளைவுகளில் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. எனவே முட்புதர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

  சுந்தரேசன், மக்கம்பாளையம்.



Next Story