ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலைமறியல்; 784 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 784 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 784 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி புதுடெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல மாதங்களாக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கு பெற்று நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நாடு முழுவதும் கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்களுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். விவசாயிகளின் அழைப்புக்கு காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று போராட்டம் நடந்தது. ஈரோட்டில் முழு அடைப்பு போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடைகள் வழக்கம்போல திறந்து இருந்தன. வாகனங்கள் வழக்கம்போல ஓடின. ஆட்டோக்கள், கார்களும் இயங்கின.
ரெயில் மறியல்
ஈரோடு மாவட்டத்தில் 15 இடங்களில் அரசியல் கட்சியினர் விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க (தொ.மு.ச.) மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் முருகையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன், மாநகர துணை தலைவர்கள் ராஜேஷ், விஜயபாஸ்கர், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ், துணை தலைவர் கே.என்.பாட்ஷா, திராவிடர் விடுதலைக்கழக அமைப்பு செயலாளர் ரத்தினசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பின்னர் போராட்டக்குழுவினர் ஈரோடு ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அங்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், விஜயா, சோமசுந்தரம், நீலாதேவி ஆகியோர் போராட்டக்குழுவினரை தடுத்தனர். அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றதால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
784 பேர் கைது
இதுபோல் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, சென்னிமலை உள்பட மொத்தம் 15 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மொத்தம் 784 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story