ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 1:56 AM IST (Updated: 28 Sept 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
பஸ் நிலையம்
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.45 கோடியே 32 லட்சம் செலவில் 4 மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. அதில் ரூ.14 கோடியே 14 லட்சம் செலவில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. ரூ.15 கோடியே 94 லட்சம் செலவில் பஸ் நிலையத்தை நவீனப்படுத்தும் பணியும், ரூ.5 கோடியே 26 லட்சம் செலவில் மினி பஸ் நிலைய நிழற்கூடம், கூடுதல் வாகன நிறுத்தம் கட்டும் பணியும், ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் பஸ் நிலையத்தை சுற்றிலும் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் அடங்கிய வரை படத்தை அவர் பார்வையிட்டார். மேலும், பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பெரும்பள்ளம் ஓடை
தொடர்ந்து காளைமாட்டுசிலை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.14 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். இந்த வணிக வளாகத்தில் 62 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு 64 இருசக்கர வாகனங்கள், 64 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளையும் பார்வையிட்ட கலெக்டர், விரைந்து      முடிக்க அறிவுறுத்தினார்.     இதேபோல் ரூ.200 கோடியே 71 லட்சம் செலவில் பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. 12 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும்பள்ளம் ஓடையில் 327 மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், 8 கிலோ மீட்டர் நீளத்துக்கு கம்பி வலை தடுப்புகளும், 25 இடங்களில் நீர்சரிவு அமைப்புகளும், ஓடையின் பக்கவாட்டில் 4 பூங்காக்களும், 2.4 கிலோ மீட்டர் நீளத்தில் இணைப்பு சாலைகளும், ஓடையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் 4 இடங்களில் பாலங்களும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளையும் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story