ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தடுத்து நிறுத்தம்


ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:02 AM IST (Updated: 28 Sept 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அனுமதியின்றி நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அனுமதியின்றி நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
போராட்டம்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஏற்கனவே மார்க்கெட் இருந்த பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவதால், வ.உ.சி. பூங்கா மைதானத்திலேயே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் இருந்து குத்தகைதாரர்கள் அதிக வாடகை கட்டணம் வசூலிப்பதாகவும், காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இதுதொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்துக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 8-ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே வேட்பு மனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது.
தடுத்து நிறுத்தம்
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த தேர்தல் வேட்பு மனு தாக்கலை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். முறையான அனுமதி பெற்ற பிறகுதான் தேர்தல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது வியாபாரிகளிடம் போலீசார் கூறுகையில், “காய்கறி மார்க்கெட்டில் ஏற்கனவே பிரச்சினை நடந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் வியாபாரிகள் சங்க தேர்தலை நடத்துவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முறையான அனுமதி பெற்ற பிறகு தேர்தலை நடத்த வேண்டும்”, என்றார்கள்.
நில பிரச்சினை
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
எங்களது சங்கத்தில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. கொரோனா காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச்செயலாளர் ஆகிய 5 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கல்   தொடங்கிய பிறகு 11 பேர் விண்ணப்பங்களை வாங்கியுள்ளார்கள்.
இதற்கிடையே சங்கத்தில் வியாபாரிகளின் பங்களிப்பு தொகையில் வாங்கப்பட்ட நில பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும், அதிக வாடகை கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என்று சில வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். தேர்தல் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் அனுமதி கடிதம் கொடுத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் குவிப்பு
மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், “காய்கறி வியாபாரிகள் சங்க தேர்தலை நடத்துவதற்கு ஆர்.டி.ஓ., மாநகராட்சி, போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதற்குள் தேர்தலுக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே தேர்தலை தொடங்க வேண்டும்”, என்றார்.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் தடுத்து நிறுத்தப்பட்டதால் மார்க்கெட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story