சென்னையில் அமைக்கப்படும் 92 மெட்ரோ ரெயில் நிலைய வரைபடம் இணையதளத்தில் வெளியீடு


சென்னையில் அமைக்கப்படும் 92 மெட்ரோ ரெயில் நிலைய வரைபடம் இணையதளத்தில் வெளியீடு
x
தினத்தந்தி 28 Sep 2021 10:41 AM GMT (Updated: 28 Sep 2021 10:41 AM GMT)

சென்னையில் 2-ம் கட்டமாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைகளில் அமைய உள்ள 92 ரெயில் நிலையங்களுக்கான வரைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

சென்னை,

சென்னையில் முதல் கட்டத்தில் 2 பாதைகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் உள்ள இடங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுவும் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் உள்ள தென்சென்னை பகுதிகளுக்கு வடசென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் எளிதாக வந்து செல்வதற்காக புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி 2-ம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3, 4 மற்றும் 5-ம் வழித்தடங்களுக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகள் மற்றும் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் நடக்கிறது.

ரெயில் நிலையங்களின் வரைபடங்கள்

3-வது வழித்தடமான மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் பாதையில் 19.1 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் 20 ரெயில் நிலையங்களும், 26.7 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையில் 30 ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்திருந்தாலும் தற்போது 92 ரெயில் நிலையங்களுக்கான வரைபடம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ரெயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைய உள்ள இடம், பரப்பளவு அருகில் உள்ள சாலைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் உயர்த்தப்பட்ட மற்றும் சுரங்கப்பாதைகளில் ரெயில் பாதைகள் அமைக்கப்படும்போது ரெயில் நிலையங்களும் கட்டுமானப்பணிகளும் நடக்க உள்ளது. திட்டமிட்டப்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story