வீட்டுக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை 2 மாணவர்கள் கைது


வீட்டுக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை 2 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 28 Sep 2021 10:49 AM GMT (Updated: 28 Sep 2021 10:49 AM GMT)

திருவொற்றியூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் நேதாஜி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது 40). முன்னாள் ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில் தற்போது மனம் திருந்தி, ஆட்டோ ஓட்டிவந்தார்.

இன்னும் திருமணம் ஆகாத ஆறுமுகம், தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார். நள்ளிரவில் குடிபோதையில் அங்கு வந்த 5 மர்மநபர்கள், ஆறுமுகத்தை வீட்டைவிட்டு வெளியே வரும்படி அழைத்தனர். இதனால் பயந்துபோன ஆறுமுகம், தனது செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

வெட்டிக்கொலை

ஆனால் அதற்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெளியே நின்ற மர்மகும்பல், சிமெண்டு சீட்டால்(ஆஸ்பெஸ்டாஸ்)ஆன அந்த வீட்டின் பக்கவாட்டில் உள்ள சிமெண்டு சீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், கூச்சலிட்டார். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அவரால் வெளியே தப்பிச்செல்ல முடியவில்லை.

ஆறுமுகத்தை சுற்றி வளைத்த மர்மகும்பல் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கும்பல் அருகில் கிடந்த கல்லை தூக்கி ஆறுமுகத்தின் தலையில் போட்டனர்.

காலி மதுபாட்டில்கள் வீச்சு

இதற்கிடையில் ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவருடைய தாய் சரோஜா மற்றும் உறவினர்கள் ஓடிவந்து கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், அவர்கள் மீது காலி மதுபாட்டில்களை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

5 பேர் கைது

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (19), பியான் வினோத்குமார் (23), கிளிண்டன் (21), தேசப்பன் (22) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ஜெயக்குமார், திருவொற்றியூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் ஆட்டோ மொபைல் படித்து வருகிறார். 18 வயதான சிறுவன், செஞ்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

Next Story