ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு


ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 9:48 PM IST (Updated: 28 Sept 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் விலை உயர்வு

பொள்ளாச்சி

ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனைமலையில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 98 விவசாயிகள் ஏலத்திற்கு 603 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. இதை 10 வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து மற்றும் விலை அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

வரத்து அதிகரிப்பு

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்ததில் 325 மூட்டைகள் முதல் தரமாக பிரிக்கப்பட்டது. இந்த கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.96.25 முதல் ரூ.102.50 வரை ஏலம் போனது. 2-ம் தரமாக பிரிக்கப்பட்ட 278 மூட்டை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.76.20 முதல் ரூ.88 வரையும் விற்பனையானது.

கடந்த வாரத்தை விட 163 மூட்டை அதிகமாக கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதற்கிடையில் வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.2.55 உயர்ந்து விற்பனையானது.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் வரத்து அதிகமாக இருந்தது.

 இதற்கிடையில் எண்ணெய் மார்க்கெட்டில் ஒரளவுக்கு விலை போனதால் கொப்பரை தேங்காய் விலையும் அதிகரித்தது. விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story