குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 28 Sept 2021 9:48 PM IST (Updated: 28 Sept 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடி மேம்பால சர்வீஸ் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு  குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள முள்ளுப்பாடு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் சாலையில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.

இதனால் சர்வீஸ் சாலை பள்ளம் விழுந்து, தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. 

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விரைந்து சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
முள்ளுப்பாடி பகுதியில் இருந்து கோவை-பொள்ளாச்சி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்து 6 மாதங்கள் ஆகிறது. 

இதனால் குடிநீர் சாலையில் வீணாக செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.  

சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்து சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

எனவே குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில்  ஏற்பட்டுள்ள உடைப்பை  சரிசெய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story